Skip to main content

“அதிமுக கோட்டையில் ஓட்டை..! விளாத்திகுளம் தொகுதி கள நிலவரம்..!”

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

வரும் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளில் விளாத்திகுளமும் ஒன்று. அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். 

 

 

ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கிறது, கூடவே கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்தின் ஓட்டு தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அதிமுக வேட்பாளர் சின்னப்பன். மாஜி எம்.எல்.ஏவான இவர், கடைசி நேர பண வினியோகம் தம்மை கரை சேர்க்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

 

nn

 

ஆனால், அதற்கு ‘செக்’ வைத்துவிட்டார் மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன். சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த இவர், சுயேட்சையாக களம் இறங்கி, தொகுதி முழுக்க சுற்றுப் பயணம் செய்து வருகிறார். மனுத்தாக்கல் அன்றே பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி, மார்க்கண்டேயன் மிரள வைத்தார். அதேபோல், ஏப்.01-ந்தேதி தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி, விளாத்திகுளம் நகரில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். 

 

பசுவந்தனையில் பிரச்சாரம் செய்தபோது, தம்மை 10 கோடி ரூபாய்க்கு கட்சித் தலைமை பேரம் பேசியது என்று ரகசியத்தை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார். இதற்கு பிறகே, அவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டியது அதிமுக தலைமை.

 

vilathikulam

 

ஏற்கனவே, புதூர் ஒன்றிய சேர்மனாகவும், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தார் மார்க்கண்டேயன். அந்த அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்தின் சந்து பொந்துகள் எல்லாம் இவருக்கு அத்துபடி. அந்த வகையில் உரிமையோடு வீடு தேடிச் சென்று தமக்கு ஒதுக்கப்பட்ட ‘காலணி’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

 

இன்னொரு பக்கம் திமுக வேட்பாளர் ஜெயக்குமாரும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பி வெற்றி பெற்றிடலாம் என்ற கணிப்பில் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

 

அதிமுகவும், சுயேட்சையும் பிரிக்கும் ஓட்டுக்களால், தாம் கரை சேரலாம் என்பது அவரது கணிப்பு. இந்த தொகுதியில் கணிசமாக மதிமுகவுக்கு செல்வாக்கு உண்டு. அந்த வாக்குகளும், திமுக கட்சி செல்வாக்கும் சூரியனை உதிக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

 

vilathikulam

 

“தேர்தல் செலவுக்கு தினகரன் பணம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் களம் இறங்கிய அ.ம.மு.கவின் ஜோதிமணியும், ஒவ்வொரு நாளும் தேர்தல் செலவுக்கு ஆகின்ற செலவை பார்த்து, இந்த விஷப்பரீட்சை நமக்கு தேவைதானா? என்று களமாடிக் கொண்டிருக்கிறார்’ என்றார் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர். 

 

 

ஏற்கனவே தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் டொனேசன் என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் மார்க்கண்டேயன். கட்சியின் நிர்வாகிகள் 80 சதவீதம் பேர் இவர் பின்னாடி இருக்கிறார்கள். அதிமுக பணம் பட்டுவாடாவை கீழ்மட்ட நிர்வாகிகள் மூலம் தான் கொடுக்க முடியும். அவர்கள் எல்லாம் இப்போது இவர் (மார்க்கண்டேயன்) பக்கம் இருப்பது, ஆளுங்கட்சிக்கு பாதகம். 

 

 

அதேபோல், ‘அதிமுகவுக்கு சமமாக நாங்களும் பணம் கொடுப்போம். புதிய தமிழகத்திற்கு என்று இந்த தொகுதியில் 30 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் உண்டு. அந்த ஓட்டுக்கள் எல்லாம் இவருக்குத் தான் விழும். ஏனெனில் மார்க்கண்டேயனின் அணுகுமுறை அப்படி என்று நம்மிடம் சொன்னார் மார்க்கண்டேயனுக்கு நெருக்கமான நபர். அதேபோல், ஐ.டி விங்க் ஒன்றும் மார்க்கண்டேயனுக்காக மிக கச்சிதமாக வேலை பார்த்து வருகிறது.

 

 

இப்போதைய நிலவரத்தை பார்க்கும்போது, முந்துகிறார் மார்க்கண்டேயன். இரண்டாவது இடத்தில் திமுக. மூன்றாவது இடத்தில் இருக்கிறது அதிமுக.!

 

 

 

 

சார்ந்த செய்திகள்