தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த 2019- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 100- க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவர் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாக, அதன் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று (29/01/2022) விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், "இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் தான் விஜய் மக்கள் இயக்கத்திற்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்க முடியும்" எனக் கூறி, அந்த சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.