
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசினார்.
அவர் பேசியதாவது, 'கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் 205 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாத ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ 5 ஆயிரம் பெற்று வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டங்களைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தி வருகின்றனர். இந்த 205 தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் இந்த மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொகுப்பு ஊதிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ''அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவார்கள். வருங்காலங்களில் தேவைக்கேற்ப படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும்'' என்றார்.