விழுப்புரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி நேற்று பள்ளிக்கு வந்துள்ளார். வகுப்பில் இருக்கும்போது மாணவி மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். அதை கவனித்த அந்த வகுப்பு ஆசிரியை ஹேமலதா என்பவர், அந்த மாணவியின் நிலை கண்டு பரிதாபப்பட்டு அவரைத் தனியே அழைத்து பரிவுடன் பேசியுள்ளார். அப்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி ஆசிரியையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக தலைமையாசிரியர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரது அறிவுரையின் பேரில் ஆசிரியை ஹேமலதா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மாணவியின் பெற்றோரையும் வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் தங்கள் மகளிடம் பேசியபோது அவர் கூறிய பாலியல் கொடுமைகள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாய்மாமனான ராஜேந்திரன் மகன் 28 வயது சசிகுமார் தன்னிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் அதையடுத்து அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து அவ்வப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இந்த கொடுமையான தகவலைக்கேட்டு துடித்துப் போன அவரது பெற்றோர், உடனடியாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் மீது சசிக்குமார் மற்றும் சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.