கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்ம மரணம் தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சின்னசேலம் காவல் நிலைய போலீசார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கணித ஆசிரியை கிருத்திகா, வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஐவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தங்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரும் கடந்த 28ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று அவர்களது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
பள்ளி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவர்களின் எதிர்காலம் கருதி ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பு அரசு வழக்கறிஞர் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்னும் ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் இருந்து வரவில்லை. அது வந்த பிறகு தான் இவர்கள் மீது என்ன பிரிவில் புதிய வழக்கு போடுவது என்று இறுதி முடிவு செய்யப்படும். அதுவரை இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியவருடன் ஒரே சிறையில் எனது மகள் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், மகள் கிருத்திகாவிற்கு பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் வருவதாகவும் மகளது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக, கிருத்திகாவை சேலம் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் ஜெயராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவின் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார். வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தந்தை மூலம் நீதிமன்றத்தின் மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் மாணவி மர்ம வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.