
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமாபுரம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோயில் வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒட்டுமொத்த முதலீட்டையும் இழந்து கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைப்பயிர்கள் அனைத்தும் வரும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் நோக்கத்துடன் சாகுபடி செய்யப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் குலை தள்ளி அடுத்த மாதத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தன. ஆயிரம் ஏக்கரில் சுமார் 5 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அவற்றுக்காக செய்யப்பட்ட முதலீடு அனைத்தும் வீணாகி விட்டது என்று வேதனையுடன் விவரிக்கும் விவசாயிகள் சேதமடைந்த வாழைப் பயிர்களின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகம் என்று கூறுகின்றனர்.
ஜூன் மாதத்தில் இப்படி ஒரு சூறைக்காற்று வீசும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வீசிய சூறைக்காற்றில் 1000 ஏக்கரில் வாழைப்பயிர்கள் நாசமாகும் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டபடி அறுவடை நடந்தால் சாகுபடிக்காக வாங்கிய கடன்களை அடைத்து விட்டு லாபம் ஈட்டலாம் என்று நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்த எங்கள் கனவில் மண் விழுந்து விட்டது. இப்போது லட்சக்கணக்கில் வாங்கிய கடன்களை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற கவலையில் உள்ளனர் விவசாயிகள். அவர்களின் கவலையைப் போக்கி கண்ணீரைத் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப்பயிர்களை அதிகாரிகள் குழுவை அனுப்பி கணக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள். சாகுபடிக்காக செய்த மனித உழைப்பு தவிர்த்த பிற செலவை மட்டுமாவது ஈடுகட்டும் வகையில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடன் சென்று சேதமடைந்த வாழைப்பயிர்களை பார்வையிட்டனர். வாழை பயிரிட்ட விவசாயிகளின் நிலைமை அறிந்த அமைச்சர் அது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்பதாக விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.