தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் காணாமல்போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம், தர்மபுரி மாவட்டத்தில் ஒருவர், சிறுமிகளின் ஆபாசப் படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் ஏடிஜிபியிடம் புகார் அளித்தது.
இந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி ஏடிஜிபி ரவி, மேற்கு மண்டல சைபர் கிரைம் எஸ்பி சுஜித்குமார், தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
பேஸ்புக்கில் வந்திருந்த இணையதள இணைப்பின் ஐ.பி. முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சோழராஜன் மகன் சீனு (26) என்பவர்தான் சிறுமிகளின் ஆபாசப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, சீனுவை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஒரு பி.இ. பட்டதாரி என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஆபாசப் படங்களை அனுப்பப் பயன்படுத்திய செல்போனையும் காவல்துறையில் பறிமுதல் செய்தனர்.