
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெல்லிங்டன் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ''இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்போது முப்படை தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது'' என நேற்று (10.12.2021) குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த தமிழ்நாடு டிஜிபி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. அந்தக் காட்சிகளை முப்பரிமாணமாக மாற்றி அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் அந்தப் பகுதியில் பூட்டப்பட்டுக் கிடந்த காட்டேஜ் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.