Skip to main content

பொய் வழக்கில் 230 நாள் சிறையில் இருந்தவருக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
judge

 

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த அனுமோகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி சசிதரன், பொய் வழக்கில் 230 நாள் சிறையில் இருந்த மனுதாரர் அனுமோகனுக்கு  நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் 230 நாள்களுக்கு 11லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை மனு தாக்கல் செய்த நாளில் இருந்து (21.4.2010) 9 சதவீத வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க வேண்டுமென தமிழக உள்துறை செயலருக்கு  கடந்த 2016 ஆகஸ்ட்29ல் உத்தரவிட்டார். 

 

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட கால வரம்பிற்குள், அரசு இழப்பீடு வழங்கவில்லை. ஆகவே, அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அனுமோகன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்நிலையில், தனிநீதிபதியின் உத்தரவானது, அடிப்படை காரணமின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆகவே அதனை ரத்து செய்ய வேண்டுமென அரசுத்தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி  சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும்,   2 லட்ச ரூபாயை  3 வாரங்களில் நீதிமன்ற பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும், தவறினால் இடைக்கால தடை தானாக நீங்கிவிடும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்