நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தமிழகத்தில் தோல்வி அடைந்தது. அதனை கூட்டணியில் சேர்த்த அதிமுகவும் மண்ணை கவ்வியது. தோல்விக்கு பிஜேபியை கூட்டணியில் சேர்த்தது தான் காரணம் என்பதை உணர்ந்த அதிமுக, அடுத்து வந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு ஏன்... தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி கொடி, பேனர் எதையும் பயன்படுத்தவில்லை.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திரமோடி பெயரை ஒரு இடத்தில் கூட உச்சரிக்கவில்லை. அந்த அளவுக்கு பிஜேபியை விலக்கி வைத்தது அதிமுக. இருந்தும் தோல்வி தான் மிஞ்சியது.
"பிஜேபியோடு இனி ஒட்டும் வேண்டாம் , உறவு வேண்டாம் என்று தூக்கி எறிந்தால், வழக்குகளை காட்டி பயமுறுத்துவார்கள் என்ற அச்சம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தது. அதனால், அவர்கள் ஆட்டுவித்த ஆட்டத்திற்கெல்லாம் ஆடினோம். அதன் விளைவு 37 உறுப்பினர்கள் இருந்த மக்களவயில் இப்போது ஒரு உறுப்பினர் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்" என்பதை உணர்ந்த அதிமுக இந்தமுறையும் பிஜேபியை கண்டுகொள்ளவில்லை.
நாங்குநேரியை திமுக காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த உடன், அதில் அதிமுக கூட்டணியில் நாம் போட்டியிட்டால் நல்லா இருக்கும் என்ற நப்பாசை பிஜேபிக்கு இருந்தது. அதுதொடர்பாக அரசல் புரசலாக பேச்சு அடிபட்டபோது, "இதுகுறித்து எங்களது கட்சித் தலைமை முடிவு எடுக்கும்" என்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் கூறினார்.
அதே பொன்னார், நாங்குநேரிக்கு அதிமுக வேட்பாளரை அறிவித்தபிறகு, திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் நாங்குநேரியை கேட்கவில்லை. கேட்டதாக தகவல் பரபரப்ப பட்டது" என்று அப்படியே வார்த்தை ஜாலத்தை மாற்றினார்.
அதே நாளில் தான் தேமுதிக விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட விஜயகாந்தும் நேற்று(28-09-2019) அதிமுக வேட்பாளர்களுக்கு இடைத் தேர்தலில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றார். அதிமுக நினைத்திருந்தால் விஜயகாந்தை பார்க்க விருகம்பாக்கம் செல்லும் வழியில்,கமலாலயத்தையும் அங்கிருந்த பொன்னாரையும் பார்த்து சென்றிருக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் அங்கம் வகித்த த.மா.கா, பா.ம.க, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அதிமுகவுக்கு இடைத் தேர்தல் ஆதரவு என்று சொல்லிவிட்டது. ஆனால், கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகத்திடம் ஆதரவு கேட்கவில்லை. அவர்களும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதேபோல் பிஜேபியிடமும் இந்த நிமிடம் வரை அதிமுக ஆதரவு கேட்கவும் இல்லை. அவர்களும் ஆதரவு அளிக்கவில்லை.
இதுகுறித்து இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பபட்டது. அப்போது, "அதிமுக கூட்டணியில் பிஜேபி நீடிக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் பிஜேபிக்கு தலைவர் இல்லை. அதனால், அவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ்சிடமும் இதே கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், "எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவை கேட்டிருக்கிறோம். அவர்கள் உறுதியாக எங்களுக்கு ஆதரவு தருவார்கள். எனவே இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும்" என தெரிவித்தார். பிஜேபி குறித்து எதுவும் அவர் பேசவில்லை.
இதுகுறித்து அதிமுக தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். "ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி. அடுத்து வந்த வேலூர் இடைத் தேர்தலிலும் தோல்வி, இப்போது இந்த 2 இடைத் தேர்தலிலும் அவர்களை (பிஜேபி) சேர்த்துகொண்டால் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அவர்களை சேர்க்க வேண்டும். அதனால், இப்போதே ஒதுக்கி வைத்துவிட்டோம்"என்றனர்.
ஆக..அதிமுகவை பொறுத்தவரை பிஜேபி என்பது, வீட்டிற்கு வந்த வேண்டாத விருந்தாளி தான் போல..!