திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 125 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் பள்ளியில் வகுப்பறை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென சுமார் 3 அடி நீலமுள்ள விஷபாம்பு ஒன்று வகுப்பறையில் புகுந்துள்ளது.
இதனால் மாணவர்கள் பாம்பைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஓடிவந்து வகுப்பறையில் இருந்த மாணவ - மாணவிகளை பாதுகாப்பாக வேறு வகுப்பறைக்கு மாற்றினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
பள்ளி வளாகத்தை சுற்றி முட்புதர்கள் நிறைந்திருப்பதாலும் போதிய சுகாதார வசதிகள் மேற்கொள்ளாததுமே பாம்புகள் வகுப்பறையில் வர காரணம் என ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் கூறுகின்றனர். உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றி துய்மை பணிகளை மேற்கொண்டு புதர்களை அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.