நெல்லையில் பட்ட பகலில் நடந்த படுகொலையை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று ஆளும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் வாழ்வாதார உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தை; மறுநாள் காலையில் டி. வியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பொய் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ரகுபதியின் கருத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது. அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, ஜெய பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?
அ.இ.அதி.மு.க கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, அதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும். கலைஞர் ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்கான மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா? என காட்டமாக விமர்சித்துள்ளார்.