மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் உள்ள தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு ஆளுயற சிலை வைப்பது என திமுக பொதுக்குழு முடிவு செய்தது. அதன்படி கலைஞருக்கான சிலை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு கலைஞரின் சிலை வடிவமைப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். இந்நிலையில் சிலைக்கான பீடம் தயாரிப்பது எங்கு வேலை நடக்கிறது என்பது ரகசியமாகவே இருந்தது. தற்போது அது வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வரகூர் என்கிற கிராமத்தில் உள்ள அருணை கிரானைட்ஸ் நிறுவனத்தில் அதற்கான பணிகள் நடக்கின்றன. இந்த கிரானைட்ஸ் நிறுவனம் முன்னாள் அமைச்சரும் திமுக மா.செவுமான எ.வ.வேலுவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது. விலை உயர்ந்த கிராணைட் கற்களால் தூண்கள் தயாரிக்கும் பணியை நவம்பர் 5-ந்தேதி மாலை எ.வ.வேலு எம்.எல்.ஏ சென்று பார்வையிட்டார். அதில் சிலச்சில மாறுதல்களை மட்டும் சுட்டிக்காட்டினார் என்கிறார்கள் அவருடன் சென்றவர்கள்.
கிராணைட்டால் செய்யப்பட்ட நான்கு கல்தூண்கள், கறுப்பு நிறத்தில் பளபளக்கும் அடிப்பாகம் என்கிற பீடம் என அனைத்தும் 90 சதவிதம் தயாராகிவிட்டது. இன்னும் சில தினங்களில் இவைகள் சென்னைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நவம்பர் மாதம் தேசிய மற்றும் மாநில தலைவர்களை அழைத்து கலைஞர் சிலை திறப்பு விழாவை பெரியதாக நடத்த திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.