கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ராமேஸ்வரம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நடராஜபுரம், மூன்றாம் சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
அதேபோல் மழை காரணமாக பெண்ணாடம் அருகே பலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் துண்டிப்பால் கடலூர், சவுந்திரசோழபுரம், அரியலூர், கோட்டைக்காடு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் பெய்த கனமழை காரணமாக அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பாம்பன் மற்றும் தங்கச்சி மடத்தில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக தற்போது திருச்சி, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, திருவாரூரில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.