வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள குடிமல்லூர் கிராமம். இந்த ஊராட்சியில் உள்ள திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இணைந்து கலைஞர் அறிவாலயம் என்கிற பெயரில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்தனர். இதற்காக திமுகவின் மாநில மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழியிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரும் மகிழ்ச்சியோடு நானே வந்து அடிக்கல் நாட்டுகிறேன் என வாக்குறுதி தந்துள்ளார். அதன் அடிப்படையில் வேலூர் கிழக்கு மா.செ காந்தியுடன் அந்த கிராமத்துக்கு செப்டம்பர் 16ந்தேதி சென்றார்.
அந்த ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன், ஊராட்சி செயலாளர் தினகரன் மற்றும் திமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் முதல் செங்கல்லை எடுத்து தந்து தொடங்கிவைத்தார் கனிமொழி எம்.பி.
அங்கு திரண்டுயிருந்த பொதுமக்கள் முன் பேசும்போது, நம் கலச்சாரத்தை, மொழியை அழிக்கும் வேலையை மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் செய்கிறது, அதற்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் துணைபோகிறது. நாம் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, மொழியை காக்க திரள வேண்டும், இந்த போராட்டத்தில் திமுக முன்னிலையில் நிற்கும் என்றார்.
அதோடு, கலைஞர் அறிவாலயத்தில் நூலகமும் அமையவுள்ளது எனச்சொல்லியுள்ளார்கள். அந்த நூலகத்துக்கு தேவையான அனைத்து நூல்களும் நான் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன் என்றார்.
35 வருடங்களுக்கு முன்பு கட்சிக்கென பேரூராட்சிகளில் இடம் வாங்கி கட்சி அலுவலகம் அமைத்தார்கள். அண்ணாவின் கனவான ஊருக்கு ஓர் கட்சி அலுவலகம் எனும் பல ஆண்டுகளாக நிறைவேறாமலே இருக்கும் நிலையில் குடிமல்லூரில் அலுவலகம் காட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
பேரூராட்சிகளில் அலுவலகம் அமைத்த பின் திருச்சியிலும், பின்னர் விழுப்புரத்திலும், கோவையிலும் கலைஞர் அறிவாலயம் கட்டினார்கள் அந்த மாவட்ட நிர்வாகிகள்.
பல மாவட்டங்களில் திமுகவுக்கு என சொந்தமாக கட்சி அலுவலகம் கிடையாது. கட்சியில் செல்வாக்காக உள்ள ஒரு மா.செவாக உள்ள எம்.எல்.ஏவின் இடங்களில் தான் அலுவலகங்கள் அமைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கலைஞர் அந்த இடங்களை கட்சிக்காக கேட்டபோதும், இன்று வரை அதனை எழுதித்தர யாரும் தயாராகவில்லை.
அப்படி கட்சிக்காக ஒரு இடத்தை இழக்காத நிர்வாகியை நம்பி திமுக இல்லை. இப்படி சொந்த காசை செலவழித்து கட்சி அலுவலகம் கட்டும் தொண்டர்களை நம்பிதான் கட்சி உள்ளது. இவர்கள் இருக்கும் வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்கிறார் மூத்த திமுக தொண்டர் ஒருவர்.