திருப்பத்தூர் மாவட்டம் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் கலந்துகொண்டு குழந்தைகளுக்கான மனமகிழ் கூடத்தைக் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஒரு சிறுமியைக் கொண்டு மனமகிழ் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்வில் பேசிய எஸ்.பி. விஜயகுமார், “குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வரும் பெண்கள் சில நேரங்களில் குழந்தைகளுடன் காவல் நிலையத்துக்கு வரும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. விசாரணையின்போது குழந்தைகள் அச்சப்படுகின்றன. இதனால் காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் நடைபெறும் விசாரணைகளைக் கண்டு அச்சப்படாமல் இருக்க குழந்தைகள் மனமகிழ் கூடம் என்கிற அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
காவல்நிலையத்தில், ஒரு அறையில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் நிலவும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல் சிறுவர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை பாதுகாப்பான அறையாக இருக்க வேண்டும் என காவல்நிலைய அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.சுபாஷினி, எஸ்.ஆர்.டி.பி.எஸ் இயக்குனர் ஆர்.தமிழரசி, சைல்ட் லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவிந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆய்வாளர் பிரேமா நன்றி கூறினார்.
காவல்நிலையத்தில் இப்படியொரு அறை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்திய அதிகாரிகளுக்குப் பொதுநல அமைப்புகள் பலவும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.