திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் , வெங்கடசமுத்திரம், அரங்கல்துருகம் , சின்னபள்ளிகுப்பம் , கைலாசகிரி, மாச்சம் பட்டு ,கொத்தூர், பாலூர் போன்ற ஊராட்சிகளின் 60 - க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆம்பூர் வனசரக காப்பு காடுகளை ஒட்டி அமைந்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளை ஒட்டி இந்த ஆம்பூர் வனசரக காப்பு காடுகள் அமைந்துள்ளன.
இரு மாநில எல்லைகளில் அமைந்துள்ள இந்த காப்பு காடுகளில் இரவு நேரங்களிலும் , சில நாட்களில் பகல் நேரங்களிலும் அவ்வப்போது அடையாளம் தெரியாத வெளி நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் துப்பாக்கிகளுடன் பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளில் சுற்றித் திரிவதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 18 ந்தேதி நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தருமன் தலைமையில் 10- க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கண்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். துருகம் காப்புக்காடுகள் , ஊட்டல் காப்புக்காடுகள் ,காரப்பட்டு காப்புக்காடுகள் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். பின்னர் பைரப்பல்லி , பொன்னப்பல்லி , சுட்டக்குண்டா , அரங்கல்துருகம் ஆகிய மலையோர கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
அறிமுகம் இல்லாத ஆட்கள் நடமாட்டம் வனப்பகுதியிலோ , வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் காணப்பட்டால் சமூக விரோதிகளின் நடமாட்டம் , வனவிலங்குகளை வேட்டையாடுவோர் ,காப்புக்காடுகள் வழியாக கள்ளசாராயம் கடத்துவோர் அல்லது வெளிமாநில மது பாட்டில்கள் கடத்துவோர் , ரேஷன் அரிசி கடத்ததுவோர் என்று யாராக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, வனத்துறையினருக்கோ அல்லது வருவாய்த் துறையினருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினர்.