திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தம்பதி இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் சென்னாசமுத்திரம் பேரூராட்சி பகுதியின் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (வயது 48). கடந்த ஐந்தாண்டுகளாக கரூரில் இருக்கக்கூடிய பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து கரூருக்கு வீட்டு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பேருந்தில் சென்றுள்ளார்.
மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பாததால் ரூபாவின் மகன் கோகுல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அவர் வீட்டு வேலை செய்த வீடுகளில் எல்லாம் விசாரித்துள்ளார். ரூபா காலை முதலே இங்கே வரவில்லை என தெரிவித்துள்ளனர். உடனடியாக அம்மாவின் செல்போனுக்கு கால் செய்த பொழுது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கரூர் போலீசாரோ நீங்கள் இருப்பது ஈரோடு பகுதியைச் சேர்ந்தது என்பதால் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கரூர் மாவட்டம் பாலமலை அருகே உள்ள குமாரசாமி என்பவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் பெண்ணுடைய சடலம் ஒன்று அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன ரூபாவின் உடல் என உறுதிப்படுத்தப்பட்டது. தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த ரூபாவின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமுக பெண் கவுன்சிலர் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரூபாவின் செல்போன் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து அவருடன் நடந்து சென்ற கணவன் மனைவியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தம்பதி நொய்யல் என்ற இடத்தில் டீக்கடை வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே அந்த தம்பதி இந்தக் கொலையில் ஈடுபட்டார்களா என்பது தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.