Skip to main content

“எங்களை ஆளாக்கிய கலைஞர் காட்டிய பாதையை மறந்துவிட மாட்டோம்” - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Tamil Nadu Chief Minister M.K.Stalin says We will not forget the path shown by the artist who ruled us

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.02.2024) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும். இந்தத் திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களாக அமைந்திருக்கின்றன.

இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘மக்களுடன் முதல்வர்’ என்கிற இந்த மகத்தான திட்டம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற இனிய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ‘மக்களிடம் செல் மக்களோடு வாழ் மக்களுக்காக வாழ்’ என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம். ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்தத் திட்டம்.

அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாகப் பெறுவதில் சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்குத் தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். அதை முழுமையாகப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக ‘மக்களுடன் முதல்வர்’ என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18-12-2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

Tamil Nadu Chief Minister M.K.Stalin says We will not forget the path shown by the artist who ruled us

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளைப் பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாகத் தீர்வு கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தோம். தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளைக் குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகளை முதலிலேயே கண்டறிந்து தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

முதற்கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக நான் பெருமையோடு சொல்கிறேன். 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை. இது தொடர்பாக, மேலும் சில புள்ளி விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள்/ பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்