வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியில் வசிப்பவர் வாணியம்பாடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அதிபர் வடிவேல். இவரது வீட்டின் பூட்டை ஜூலை 7 ஆம் தேதி இரவு உடைத்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த 92 சவரன் தங்க நகை 25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜூலை 8 ஆம் தேதி காலை இதைப் பார்த்து விட்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றால் பத்திரிக்கைகளுக்கு தகவல் தருவது வழக்கம். இந்த விவகாரத்தில் பத்திரிக்கை, மீடியாவுக்கு தகவல் சொல்லவில்லை.
இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார் வருகை தந்தார். அப்போது தான் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்து அதிர்ச்சியாகி விட்டனர். கொள்ளை நடந்த வீடு, வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தை சேர்ந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்துள்ளது. இதுப்பற்றி போலீசாருக்கு தகவல் சொல்லியும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும் காவல்துறையினரின் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பற்றி காவல்துறையில் புகார் தந்தால் புகாரை வாங்க மறுப்பதும் 100 சவரன் தங்க நகை காணவில்லை என்று புகார் கொடுத்தால் 20 பவுன் என எழுதி தந்தால் தான் வாங்குவோம் என மிரட்டி அவர்கள் சொல்வது போல் புகாரை எழுதி வாங்கி பதிவு செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு திருடு நடந்தால் அதுப்பற்றி பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளனர். இந்த தொழிலதிபரையும் அப்படி தான் வாணியம்பாடி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி மிரட்டினார்கள் எனக் கூறப்படுகிறது. திருடர்களுடன் காவல்துறையை சேர்ந்தவர்கள் கூட்டு வைத்திருப்பது மற்றும் மெத்தனமாக செயல்படுவது போன்றவற்றால் தான் திருடுகள் அதிகமாக நடைபெறுகின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.