![petrol](http://image.nakkheeran.in/cdn/farfuture/MB-hHKmDnKvzoBtZyeIHHRP_9BlfmG5fX7GNpNgsnqs/1538420882/sites/default/files/inline-images/petrol_7.jpg)
எக்ஸ்ட்ரா கோட்டா மோசடி ஆதாரம்
டி.வி.ஏ.சி. எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உயரதிகாரி மீது… அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி. கொடுத்த புகார் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்… “ஊழலைத் தடுக்கவேண்டிய எங்களது துறையிலேயே நடக்கும் ஊழல் மோசடி குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நக்கீரன்தான் அம்பலப்படுத்தணும்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து குமுறுகிறார் அதேத்துறையில் 25 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு பெண்.
என்ன ஊழல் மோசடி நடக்கிறது? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரகத்தில் (Directorate of Vigilance and Anti-Corruption) நிர்வாகப்பிரிவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் எலிசெபத் ஷீபாலினிடம் நாம் கேட்டபோது, “டி.வி.ஏ.சி. துறையின் நிர்வாகப்பிரிவில் உதவியாளராக இருந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் போட்டதற்கான கணக்கு வழக்குகளையும் பார்க்கவேண்டியிருக்கும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பெட்ரோல் டீசல் போட்டால் அதற்கான காரணத்தை அரசுக்கு தெரிவித்து டி.வி.ஏ.சி. இயக்குனர் அல்லது இணை/ துணை இயக்குனர்கள் மூலமாக அரசிடம் ஒப்புதலுக்கு (ratification proposal) அனுப்பி அரசின் பின்னேற்பாணை பெற வேண்டும். அந்த, ப்ரபோசல் அரசால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் எக்ஸ்ட்ரா கோட்டா (கூடுதல்) பெட்ரோல், டீசலுக்கான தொகையை அரசின் நிதிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
அனைத்துத்துறைகளிலும் இதுதான் நிலைமை. ஆனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளோ இந்த ‘எக்ஸ்ட்ரா கோட்டா’ பெட்ரோல், டீசல் தொகையை அரசுக்கு கட்டுவதும் இல்லை; அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்புவதும் இல்லை; அரசின் ஒப்புதல் ஆணையை பெறுவதும் இல்லை. இவர்களே, ஒரு படிவத்தில் எழுதி இவர்களே ஏற்றுக்கொண்டதுபோல் விஜிலன்ஸ் ஆஃபீஸிலேயே வைத்துக் கொள்வார்கள். சைதாப்பேட்டை சம்பள கணக்கு கருவூலம்(தெற்கு) அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா கோட்டா பெட்ரோல், டீசல் பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு எரிபொருள் பில்லை பாஸ் பண்ணி விடுவார்கள். அக்கவுண்ட்டன்ட் ஜெனரல் ஆஃபீஸ் ஆடிட்டிலும், லோக்கல் ஃபண்டு ஆடிட்டிலும் எதுவும் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமல்ல, ஒரு வண்டிக்கு பிடித்தம் செய்யும் பெட்ரோல், டீசல் கணக்கை ஒயிட்னர் போட்டு மாற்றி மிக குறைவாக பெட்ரோல், டீசல் பிடித்த வண்டியின் கணக்கில் முறைகேடாக கணக்கு காட்டுவதும் நடக்கிறது. இதுகுறித்து, நான் கேள்வி எழுப்பியதால்தான் எனது நிர்வாக அதிகாரியாக இருந்த சாரதா மூலம் எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து கண்காணிப்பாளராக வரக்கூடிய எனது பதவி உயர்வையே தடுத்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டியவரிடம்,
“இதையெல்லாம் காரணம் காட்டி பதவி உயர்வை தடுக்கமுடியுமா?” என்று நாம் கேள்வி எழுப்பியபோது, “2006 ஆம் ஆண்டு எனக்கு கடுமையான வேலை நெருக்கடி இருந்ததால் கான்ஃபிடன்ஷியல் பிராஞ்சிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்படவேண்டும் என்பதற்காக சீனியாரிட்டியை விட்டுத்தருவதாக கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால், என்னைப்போலவே நிர்வாக அலுவலர் சாரதா உள்ளிட்டவர்கள் பலர் கான்ஃபிடன்ஷியல் பிராஞ்சுக்கு சென்று வேலை செய்யமுடியாமல் திரும்பவும் நிர்வாக பிரிவுக்கு 5 வருடத்திற்குள் வந்தால் ஒரிஜினல் சீனியாரிட்டி பாதிக்காது என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஒரிஜினல் சீனியாரிட்டி அடிப்படையிலேயே புரோமோஷன் கொடுக்கப்பட்டது என்ற தகவல். அப்படியிருக்க, நான் மட்டும் ஏன் சீனியாரிட்டியை விட்டுத்தரவேண்டும்? எனது ஒரிஜினல் சீனியாரிட்டியிலேயே நீடிக்க விரும்புகிறேன் என்று கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால், என் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் தூண்டுதலால் நான் முதலில் கொடுத்த கடிதத்தைவைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இடையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருந்த என்னை மீண்டும் உதவியாளராக பணியிறக்கம் செய்துவிட்டார்கள்.
![petrol](http://image.nakkheeran.in/cdn/farfuture/CB8Pa-FZic16eeBQcjSNGKy8tTXaHA8Y7ZLhMzVgecI/1538421194/sites/default/files/inline-images/8004.jpg)
எலிசெபத் ஷீபாலின்
அதோடு, விட்டிருந்தால் பரவாயில்லை. என்னுடைய நீதிமன்ற வழக்கு ஃபைல் காணாமல் போய்விட்டதாக காரணம் கூறி புதிய ஃபைலை தயாரிக்கும்போது 2014 ஜூன் 17-ந்தேதி தேதியிலிருந்த ஆணையையும், அலுவலக குறிப்பு எனப்படும் ஆஃபிஸ் நோட்டையும், மோசடியாக மாற்றி புதிய ஃபைல் தயாரித்துவிட்டார்கள். இதனால், 2017 ஆண்டும் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறமுடியவில்லை. மேலும், என்னை விட பல வருடங்கள் ஜூனியர்களான தேவி, சாந்தி ஆகியோருக்கு முறைகேடாக கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கி விட்டனர்.
இதுகுறித்து, 2018 ஏப்ரல் மாதம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் மோகன் பியாரே (விஜிலென்ஸ் கமிஷனர்) உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்துவிட்டேன். இதுகுறித்து, இணை இயக்குனர் முருகன் ஐ.பி.எஸ். அழைத்து பேசினார். ‘உங்கள் தகவல் மற்றும் க்ரீவன்ஸ் மனு, வழக்கறிஞர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், உங்களுக்கு பதவி உயர்வு தரச்சொல்லி பரிந்துரைத்தால் தந்துவிடுவோம்’ என்றார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த வருடமும் சீனியாரிட்டி பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை விட 15 வருட ஜூனியர்கள் இருவரின் பெயர்களை கண்காணிப்பாளர் பதவி சீனியாரிட்டி பட்டியலில் பெயரை சேர்த்து ஆணை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், இதுகுறித்து எனது புகார் மனுக்களுக்கு இதுவரை ஆரம்பக்கட்ட விசாரணைகூட செய்யவில்லை. இப்படியிருந்தால், ஊழல் மோசடிகளை தட்டிக்கேட்கவேண்டும் என்ற எண்ணம் எந்த அரசு ஊழியருக்கு வரும்?” என்று குற்றம்சாட்டி கேள்வி எழுப்புகிறார்.
![petrol](http://image.nakkheeran.in/cdn/farfuture/7hwOb9-aB7ZvUQvJr-OqDcoeFGWYr6eMnuo4FBYRg7A/1538421232/sites/default/files/inline-images/8003.jpg)
இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் உயரதிகாரியிடம் கேட்டபோது, பெயர் வேண்டாம் என்று தவிர்த்த அந்த அதிகாரி, “எலிசெபத் ஷீபாலினின் பதவி உயர்வில் அவருக்கு வேண்டப்படாதவர்கள் அவருக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுக்கிறார்கள் என்று தெரியவருகிறது. அதனால், அவரது பதவி உயர்வு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம். அரசுதான் முடிவெடுக்கவேண்டும். பெட்ரோல் டீசலில் நடக்கும் மோசடிகள் குறித்து அவர் சொல்லும் புகார்கள் உண்மையா? பொய்யா? என்று விசாரித்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
ஊழலை தடுக்கவேண்டிய அதிகாரிகளே ஊழல் மோசடிகளை செய்துவதும் கேள்வி எழுப்புகிறவர்களை பழிவாங்கினால் சமூகத்தில் நடக்கும் ஊழல்களை எப்படி தடுப்பார்கள்?