வால்மார்ட்டை நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட்டால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்து பேட்டியில்,
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும். ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது.
இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.
ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும். தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும்.
இந்திய வணிகர்களை காப்பற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை காணாத மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.