திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்களம் பேரூராட்சியின் பல இடங்களில் காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில், காவல்துறை ஆய்வாளர் விநாயகமூர்த்தி அமைத்தார். ஜனவரி 15 ஆம் தேதி அந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைக்கும் நிகழ்வுக்கு வேலூர் மண்டல காவல்துறை துணைத் தலைவர் காமினி வருகை தந்தார்.
கேமராக்களின் செயல்பாடுகளை கண்ணமங்களம் காவல்நிலையத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து இயக்கிவைத்து அதனைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல்நிலைய பகுதியில் தான் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் வசிக்கும் வீடற்ற, ஏழை மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உதவி பொருட்கள் டிஐஐீ காமினி, எஸ்.பி அரவிந்த், ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் வழங்கினார்கள்.
கண்ணமங்களம் என்பது சிறிய பேரூராட்சி பகுதி. வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையோர பகுதியாகும். கண்ணமங்களம் பகுதியோடு திருவண்ணாமலை மாவட்டம் எல்லை முடிகிறது. 24 மணி நேரமும் பிஸியாக போக்குவரத்து உள்ள பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு அடிக்கடி குற்றச் சம்பங்கள் நடைபெறுகின்றன. அதனாலேயே இங்கு கூடுதலான அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.