தேனி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கும் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித்குமார். நிலப்பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பகுதியில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த உத்தமபாளையம் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மதன், ஜெயபிரபு, கார் ஓட்டுநர்களான செல்வம், ஆனந்தன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றொரு வழக்கறிஞர் சொக்கர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததும், தலைமறைவாக இருந்த மூதாட்டி மயிலம்மாள் என இந்த வழக்கில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த ரஞ்சித்குமாரின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதனை பட்டப்பகலில் சாலை ஓரத்தில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். உத்தமபாளையம் நீதிமன்றத்தில் அலுவல் பணியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் மதனை, காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே அவரை இடித்து கீழே தள்ளியது. அதில் நிலைகுலைந்து விழுந்த மதனை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அக்கம்பக்கத்தினர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மதன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மதனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. அதோடு, மதனை வெட்டிய கும்பல் காரில் தப்பியோட முயன்றபோது, உத்தமபாளையம் - அம்மாபட்டி சாலையில் காவல்துறையினர் பிடித்தனர். இதில், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித்குமாரின் தந்தை கருணாநிதி, சகோதரர்கள் செல்வேந்திரன், சுதேசி மற்றும் உறவினர் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சித்குமாரின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக மதனை படுகொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி பட்டப்பகலில் பழிக்குப் பழியாக வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.