திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூடுதல் பேருந்து நிலையத்தின் அருகே வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். பரபரப்பான சந்தையாக இந்த வாரச்சந்தை இருந்து வருகிறது.
இந்நிலையில் மாட்டுச்சந்தை நடைபெற்று வரும் நேரத்தில் கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று வழக்கம்போல திருப்புத்தூர் வாணியம்பாடியில் வாரச்சந்தை கூடியிருந்தது. அப்பொழுது வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த நபர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்ல முயன்றார்.
மேலும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் கேட்டபொழுது அது என்னுடைய வாகனம் என்று கூறியுள்ளார். இதனால் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர். உடனடியாக அங்கு வந்த நகர போலீசார் அந்த நபரை அவர்களிடமிருந்து மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.