தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் காரணமாக தூத்துக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இரு தேர்தல் வழக்குகளிலும் வாக்கு எண்ணிக்கை குறித்தோ, மின்னனு இயந்திரங்கள் குறித்தோ எந்த புகாரும் தெரிவிக்கப்படாததால் வேறு தேர்தல்களுக்குப் பயன்படுத்தும் வகையில் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். பிரதான தேர்தல் வழக்குகள் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.