தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மேலும் தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மலைப்பாங்கான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை வைத்திருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளது. திரையரங்குகளைத் திறப்பது பற்றி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழு தரும் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கோவிட் சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருவ மழைக்காலத்தில் அவசர கால முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகை காலத்தில் கரோனா தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கரோனா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டே, தமிழக அரசு செயல்படுகிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வர் பேசினார்.