கரோனாவிற்கு பயந்து, ஞாயிற்றுக்கிழமை சுயஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க அடுத்தடுத்து 7 திருமணங்கள் நடந்தேறியுள்ளது நெல்லை ஜங்சனில்..!
கரோனா தொற்று நோயினை மேற்கொண்டு பரவவிடாமல் தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உரிய காரணமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டமென மக்களுக்கு வேண்டுகோளை விடுத்து, சுய ஊரடங்கை பிரதமர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து 14 மணி நேர சுய ஊரடங்கு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் செயல்படுகின்றன.
இது போல் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிக்கள், தேவாலயங்கள் மற்றும் இறை வழிபாட்டுத் தலங்களுக்கும் தாங்களாகவே வரையறை வகுத்திருக்க திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எனினும், இன்று காலை நெல்லை சந்திப்பிலுள்ள சாலைக்குமாரசுவாமி கோவிலில் பிரதான வாசல் சாத்தப்பட்டிருக்க, வெளியேறும் பகுதிக்கான வாசலை திறந்து அடுத்தடுத்து ஏழு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர் கோவில் நிர்வாகத்தினர்.
"இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிச்சயக்கப்பட்டது இத்திருமணங்கள்.! ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கூடியிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க எளிய முறையில் இத்திருமணங்கள் நடைப்பெற்றது. முதல் இரண்டு திருமணம் 6 மணி முதல் 7 மணி வரைக்கும், அடுத்தடுத்த திருமணங்கள் 8 மணி முதல் 9.30 மணி வரையிலும் நடைப்பெற்றது." என்கின்றனர் கோவில் ஊழியர்கள். சுய ஊரடங்கை பின்பற்றவில்லை என்கின்ற் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, மறுபுறமோ கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.