தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் முக்கியமானது, முழு ஊரடங்கு. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த முழு ஊரடங்கிலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மக்கள் வெளியே சென்று வர ஏதுவாக இ-பதிவு முறையை அறிமுகம் செய்து, அது நடைமுறையில் இருந்துவருகிறது. இருந்தும் சிலர் இ-பதிவு இல்லாமல் தங்கள் இஷ்டம் போல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதனைத் தடுக்க காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முறையாக இ-பதிவு செய்து ஓடுகிறதா என பூந்தமல்லி நெடுஞ்சாலை - பெரியார் சாலை அருகே காவல்துறையினர் இ-பதிவு சோதனை செய்தார்கள். பூக்கடை துணை ஆணையர் மகேஸ்வரன் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று வாகன சோதனை செய்யும் இடங்களை ஆய்வு நடத்தினர்.