Skip to main content

வாகன சோதனை! உயிருக்கே சோதனை! போலீஸ் அடித்ததால் இளைஞர் தற்கொலை!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
muniyasamy

 

ஸ்ரீவில்லிபுத்தூர் – மல்லி – எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முனியசாமி. 24 வயதுதான் ஆகிறது. மின்வாரியத்துக்காக, குழி தோண்டுவது, போஸ்ட் நடுவது போன்ற கடுமையான வேலைகளைப் பார்த்துவந்த தற்காலிக ஊழியர். உழைப்பினால் ஏற்படும் உடல் அசதியைப் போக்குவதற்காக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.

 

கடந்த 22-ஆம் தேதி,  மது அருந்திவிட்டு, டூ வீலரில் சிவகாசி அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது, சிவகாசி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ராமநாதன், இவரிடம் சோதனை நடத்தியிருக்கிறார். ஓட்டுநர் உரிமமும் முனியசாமியிடம் இல்லை. அதனால், வழக்கு பதிவு செய்திருக்கிறார் ராமநாதன். சிவகாசி டவுண் காவல்நிலையத்துக்கு, முனியசாமியின் டூ வீலர் கொண்டு செல்லப்பட் டிருக்கிறது.  அவரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறார். இந்த விபரத்தை, தன் குடும்பத்தாரிடம் முனியசாமி சொல்லவில்லை போலும். இதனால் மன உளைச்சலில்  தவித்திருக்கிறார். திடீரென்று ஒரு துண்டுச்சீட்டில் ‘டிராபிக் எஸ்.ஐ. மகேந்திரன் ரோட்டில் சென்ற என்னை அடித்தார். அவமானத்தால் சாகிறேன்’ என்று எழுதி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, குருணை மருந்தைக் கலக்கி குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

 

“மகேந்திரன் என்ற பெயரில் டிராபிக் எஸ்.ஐ. யாரும் கிடையாது. எஸ்.ஐ. ராமநாதனும் அடிக்கவில்லை என்கிறார். அந்த இடத்தில் பொருத்தப் பட்டிருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜையும் பார்த்தோம். முனியசாமி அடி வாங்கிய காட்சி எதுவும் பதிவாகவில்லை. எதற்காக இப்படி எழுதினார்? வேறு பிரச்சனை இருக்குமோ?”  என்று மண்டை காய்ந்துபோய்ச் சொல்கிறார்கள். 

 

உடலை வாங்க மறுக்கும்  முனியசாமியின் உறவினர்களோ “எஸ்.ஐ.யின் பெயரை  வேண்டுமானால் தவறாக எழுதியிருக்கலாம்.  ஆனால், உயிரைவிடத் துணிந்த முனியசாமிக்கு,  எஸ்.ஐ. ஒருவர் அடித்தார் என்று பொய்யாக எழுத வேண்டிய அவசியம் இல்லை.” என்று குமுறுகின்றனர். 

 

மது உயிருக்கு கேடு என்று என்பதை அறிந்தே பலரும் குடிக்கிறார்கள். மதுப்பழக்கம் உள்ள முனியசாமியோ, குருணை மருந்தையும் குடித்து,  ஒரேயடியாக தன் உயிருக்கு உலை வைத்துக்கொண்டார். 

 

இப்போதெல்லாம், வாகன சோதனை வழக்கு பதிவுகள், உயிருக்கும் சோதனை ஆகிவருகிறது. 


 

சார்ந்த செய்திகள்