ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் முருகனின் மனவைி நளினியும் தண்டனை அனுபவித்துவருகின்றனர். தனக்கு பரோல் வேண்டும் எனக்கேட்டு முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், முருகனின் அறையில் இருந்து ஸ்மார்ட் போன், இரண்டு சிம்கார்டுகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை சார்பில் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அந்த செல்போனை ஆய்வு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.

சிறை விதிகளை மீறியதால் 3 மாதங்களுக்கு முருகனின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து முருகன் கடந்த 10 தினங்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதனை சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தாத நிலையில் கடந்த 26ந்தேதி முதல் பெண்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தனது கணவரை தனியறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாகவும், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருப்பவர், இது தொடர்பாக முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நளினியின் உண்ணாவிரதத்தை ஏற்றுக்கொண்டுள்ள சிறை நிர்வாகம், உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதே நேரத்தில் அவரது உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை சிறை நிர்வாகம், தினமும் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஐீ ஜெயபாரதியிடம் வழங்கிவருகிறது.
ஐந்தாவது நாளான செப்டம்பர் 30ந்தேதி சிறைத்துறை வழங்கிய மருத்துவ அறிக்கையை டி.ஐ.ஐீ ஜெயபாரதி, சிறைத்துறை தலைமைக்கு அனுப்பியுள்ளார் என்கிறார்கள் சிறைத்துறை வட்டாரத்தில்.
தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் நளினி மிகவும் சோர்ந்துப்போய்வுள்ளார் என்கிறார்கள் சிறைத்தரப்பில். இதனால் அதிகாரிகள் தரப்பில் தொடர்ச்சியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள். பத்தாவது நாளாக உண்ணாவிரம் இருந்து வரும் முருகன் உடலும் சோர்ந்துப்போய்வுள்ளது. இருவரின் உண்ணாவிரதத்தை அதிமுக அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.