பொதுவாக 10 ரூபாய் நாணயத்தை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகளில் நடத்துனர்கள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ''அரசாங்கம்தானே 10 ரூபாய் நாணயத்தை அச்சடித்து வெளியிடுகிறது. அதனை வாங்க மறுப்பது ஏன்?'' என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதும், ''அதெல்லாம் எனக்கு தெரியாது, வாங்கக்கூடாது என அதிகாரிகள் சொல்லுகிறார்கள்'' என பதிலுக்கு நடத்துனர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது கண்கூடாகவே பார்க்க நேரிடுகிறது. இதனால் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் கூட அதனை வாங்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரு சுற்றறிக்கை வாட்ஸ் அப்புகளில் பரவியது. கோயம்பத்தூர் லிமிட்டில் உள்ள திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் அந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக அதில் ரப்பர் ஸ்டாம்ப் பதியப்பட்டுள்ளது.
அதில், ''நடத்துனர்கள் பேருந்துகளில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் ரூபாய் 10 நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும் பட்சத்தில் வழித்டத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது ரூபாய் 10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன்மூலம் அனைத்து நடத்துனர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயம் விஷயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு அரசு உரிய முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் இணையதளத்தில் பரவியது. இதையடுத்து திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபார், வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டு இருந்ததாகவும், ஆனால் பொதுமக்களிடம் இது தவறான கருத்தாக பரவிவிட்டதாகவும் கூறினார். மேலும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.