காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பாமக இன்று கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தின் ஒருகட்டமாக திண்டிவனத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் இரஞ்சித் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
முதலில் திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவரை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீக்காய சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்தார்.
அதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் ரஞ்சித்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஸ்கேன் செய்வதற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு ரஞ்சித் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவரை ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்களிடம் பேசிய ராமதாஸ், உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் அளித்து ரஞ்சித்தைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார்.