Skip to main content

தமிழர், கன்னடர் இன மோதலை தூண்டும் வாட்டாள் நாகராஜ்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பின் சதி செயலால் தமிழர், கன்னடர்களுக்குள் இன மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தையடுத்த தாளவாடி மலைப்பகுதி, தமிழகம் - கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் தமிழ்நாட்டின் நுழைவு எல்லையில் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் வரவேற்புப் பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகிய இரண்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

 

கடந்த 10ம் தேதி மாலை கன்னட அமைப்பினரால் இந்த பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னட சலுவாலியா கட்சி தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களைக் கிழித்தும், மற்றோரு பெயர்பலகையை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி கீழே தள்ளிவிட்டனர். மேலும் அவர்கள் கன்னட மொழியில் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, தமிழகத்தைச் சேர்ந்த ஊரான தாளவாடியை "தாளவாடி கர்நாடகாவுக்கு சேர்ந்தது" எனவும் கோஷமிட்டனர்.

 

வனத்துறை, வருவாய் துறை, தோட்டக்கலை துறை, காவல் துறை என இரு மாநில அரசுகளின் துறை ரீதியான அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்கள் மத்தியிலும் இன பேதமோ, எல்லை பிரச்சனையோ எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த சூழலில், கன்னட வாட்டாள் நாகராஜ் குரூப் திட்டமிட்டே பகைமையும் அதன் மூலமாக கலவரம் செய்யவும் இச்செயலை அரங்கேற்றியுள்ளது.

 

இதுகுறித்து விசாரணை செய்த தாளவாடி போலீசார், வாட்டள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 பேர் மீது தமிழக அரசின் பொது சொத்தை தேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

 

இதற்கிடையே இந்த பரபரப்பு ஓய்வதற்குள், 17 ம் தேதி மாலை தாளவாடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், தமிழக கர்நாடக மாநில வனப்பகுதியின் எல்லையில் உள்ள பைனாபுரம் என்ற கிராமம் அருகே எத்திக்கட்டையில் தமிழக அரசின் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகையும், நெடுஞ்சாலைத் துறையின் எல்லை முடிவு பலகையும் சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது மேலும் கொந்தளிப்பையும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்தச் சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை எனவும், அதற்கு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாளவாடி போலீசார் கூறுகின்றனர். இரு மாநில எல்லைப்பகுதியான பைனாபுரம் கிராமம் எத்திக்கட்டை, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாலும், ஆள் நடமாட்டம் அங்கு இல்லாததாலும், யார் இந்த பலகைகளை சேதப்படுத்தியிருப்பார்கள் என்பது மர்மமாக இருந்தாலும் இதுவும் கன்னட அமைப்பின் வன்முறைக்கான சதி செயல்தான்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசோ, உயர் அதிகாரிகளோ இதற்கு எந்த கன்டன குரலும் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம், கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு இருப்பதால்தான். பா.ஜ.க. மேலிடத்திற்கு கட்டுப்படுவதாக இருந்தாலும், இனவெறியை ஏற்படுத்தும் வன்முறை கும்பலைக் கண்டிக்க வேண்டாமா? என தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. 

 

சார்ந்த செய்திகள்