சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். அதன்படி ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதே சமயம் இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி (12.08.2024) குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் இன்று (09.01.2025) செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் சண்முகம், அரசு அதிகாரிகள் உட்பட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் விசாரணை நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.