காவிரி நதிநீர் பிரச்சனையில் கருநாடக மாநில அரசு எதைச் சொல்லிவருகிறதோ அதையே தமிழ்நாடு முதல் அமைச்சரும் சொல்லுவது சரியானதுதானா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1924ஆம் ஆண்டு சென்னை மாநில அரசுக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே மேற்கொள்ளப் பட்ட காவிரி நீர் தொடர்பான ஒப்பந்தம் 50 ஆண்டு களுக்குப் பிறகு - - அதாவது 1974ஆம் ஆண்டோடு தானாகவே ரத்தாகிவிட்டது என்று பல கால கட்டங்களில் தவறாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது.
குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களே பொறுப்பில்லாமல் அவ்வாறு கூறியதற்காக திராவிடர் கழகம் அவருக்கு சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தி (9.11.1991) கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதுண்டு.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களும் காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டோடு முடிவுற்றது என கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியதாகும். (இந்து 19.2.2018) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசே கூட்டியுள்ள ஒரு காலகட்டத்தில் ஒரு முதல் அமைச்சரிடமிருந்து இத்தகு கருத்து வெளியாகி இருப்பது தேவையில்லாதது ஆகும். கருநாடக மாநில அரசு எதைச் சொல்லிவருகிறதோ அதையே தமிழ்நாடு முதல் அமைச்சரும் சொல்லுவது சரியானதுதானா? அப்படியே இருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் இப்படிக் கூறுவது யாருக்கு இலாபமாக முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உண்மை நிலை என்ன? 1974இல் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
ஒப்பந்தத்தில் பிரிவு 10- உட்பிரிவு 11 இவ்வாறு கூறுகிறது,
50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிற அனுப வங்களைக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் திருத்தங் களையும் சேர்க்கைகளையும் செய்து கொள்ளலாம்; குறிப்பாக காவிரி உபரிநீர் பற்றிப் பரிசீலனை செய்யலாம் என்பதுதான் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாகும்.
உண்மை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு முதல் அமைச்சர் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய கருத்தினைத் தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.