Published on 04/06/2022 | Edited on 04/06/2022
திருச்சி, துறையூர் மருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு (59). இவர், ஜம்புணதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இன்று காலை இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தா.பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சக்கம்பட்டி என்ற இடத்தில் இவருக்கு எதிரே வந்த வேன், தங்கவேலுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் விஜயன்(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.