Skip to main content

'கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூரில் காட்டம்

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  விழாவில் முதல்வர் பேசுகையில்,''கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் இந்த நிகழ்ச்சியில் மனித கடவுள்களை கூட்டியுள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 

திராவிட ஆட்சியில் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதில் பண்ருட்டியில் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், கடலூர்  சொக்கிகுப்பம், தாழங்குட பகுதிகளில் மேம்பாலம், நெல்லிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம், கடலூரில் மாவட்ட காவல்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளது. 

தற்போது திராவிட ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளில் சிதம்பரம் பேருந்து நிலையம் 15 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது, பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, அதேபோல் கடலூர் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் பத்து புதிய திட்டங்களை அறிவிக்கிறேன் எனக் கூறிய அவர் திட்டக்குடி விருத்தாச்சலம் பகுதியில் உள்ள வெலிங்டன் ஏரி தூர்வாரி வாய்க்கால் அமைக்கும் பணிகள், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும், பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும், புவனகிரி சிதம்பரம் பகுதியை ஒட்டியுள்ள முட்லூரில் இருந்து சேத்தியாதோப்பு வரை இருவழி சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும், நெய்வேலி அருகே உள்ள செம்மேடு சிறுவத்தூர் அருகே கெடிலம் ஆற்றில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பத்து திட்டங்களை தொடங்கப்படும். மேடையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அறிவிப்பாக மற்றும் இல்லாமல் மக்களின் இதயம் வரை சென்று சேரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  மக்களின் திட்டத்தால்தான்  மகிழ்ச்சி.  கொள்கை லட்சியத்தோடு செயல்படுவது தான் திராவிட மாடலாச்சி அதனாலதான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எளிதில் சென்றுவிடலாம் ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து இருபுறங்களிலும் மக்களின் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.

ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது இதை அண்ணன் சீதனம் என பெண்கள் கூறுகிறார்கள்.  பெண்கள் கல்வியில் பாதியில் நின்று விட கூட என்பதற்காக பல்வேறு திட்டங்களை விடியல் அரசு  பாகுபாடு இல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி வறுமை அல்ல பெருமைக்கு என அரசு பள்ளிக்கு பல்வேறு திட்ட பணிகளை பார்த்து பார்த்து செய்கிறது.  அதனால் தான் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் தவப்புதல்வன், உயர்ந்த வேலைக்குச் செல்ல நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளை செயல்படுத்துகிறது. இது பாகுபாடற்ற எல்லாருக்குமான ஆட்சியாகும்.  இந்தியாவின் முன்மாதிரி திராவிட ஆட்சி நடைபெற்று வருகிறது.  ஒன்றிய அரசு ஜிஎஸ்டி நிதியை கபளீகரம் செய்து நிதி தர மறுக்கிறது. புதிய திட்டங்களை அறிவிக்க மறுக்கிறது திட்ட நிதியும் தர மறுக்கிறது அதையும் தாண்டி திராவிட அரசு உயர்கிறது.  அதுதான் அவர்களுக்கு கண்ணை உறுத்துகிறது.

நூறாண்டுகளுக்கு முன்பு கல்வி சாலைகளை அமைத்து எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சமூக மக்களும் கல்வி கற்க பாடுபட்டு அடித்தளம் அமைக்கப்பட்ட இயக்கம் இதனை தேசிய கல்விக் கொள்கை என உருவாக்கி ஒரு குலைக்க பார்க்கிறார்கள்.  தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 2152 கோடி தர மறுக்கிறது. இதனை தர வேண்டும் என ஒன்றிய பிரதமர் மோடிக்கு முதல்வர் என்ற முறையில் கடிதம் எழுதினேன்.  அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியில்  அரசியல் செய்யாதீர்கள் என பதில் எழுதியுள்ளார்.  அரசியல் செய்வது நீங்களா நாங்களா?  மும்மொழி கொள்கையை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழி பேசும் இந்தியாவில் ஒரு மொழி கொள்கை என்பது அரசியல் இல்லையா?  ஒரு திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு நிபந்தனை விதித்து நிர்பந்திப்பது அரசியல் இல்லையா?  திராவிட அரசு நிதியை மக்கள் திட்டத்திற்கு செலவு செய்கிறது . ஆனால் ஒன்றிய அரசு இந்தி திணிப்பிற்கு நிதியை செலவு செய்கிறது. எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிதியை தர முடியாது என்றால் நாங்க ஒரு நொடி யோசித்தால் போதும் புரிஞ்சுக்கோங்க. கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம் அதுதான் இந்தியாவின் நல்லெண்ணத்திற்கு அடையாளம் அதைக்கூட புரிஞ்சுக்காம ஒன்றிய அரசு உள்ளது.  தேசிய கல்விக் கொள்கை கல்வியை வளர்க்க கொண்டு வரவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வந்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக கொண்டு வந்தால் எதிர்ப்பார்கள் என்பதால் முலாம் பூசி கொண்டு வருகிறார்கள். தாய் மொழியை வளர்க்க தான் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார் ஒன்றிய அமைச்சர் அவர்களே எங்களுக்கு தெரியும் தாய்மொழியே வளர்ப்பதற்கு. நீங்க வந்து தான் தாய் மொழியை வளர்ப்பீங்க என தமிழ் மொழி கையேந்தி நிற்கவில்லை.  இந்தியை தாய்மொழி இல்லாத மாநிலத்தவர்களிடம்  கேளுங்கள் உங்களின் சதி திட்டம் புரியும். ஒன்றிய அரசை கடுமையாக எச்சரிக்கிறேன் தேன் கூட்டில் கை வைக்காதீங்க தமிழக மக்களின் தனித்துவமான குணத்தை பார்க்கணும்னு மறுபடியும் ஆசைப்படாதீங்க. தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக எந்த திட்டங்களையும் நான் இருக்கிற வரைக்கும் திமுக இருக்கிற வரைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிற வரைக்கும் ஒருபோதும் முடியாது.  மக்கள் முன்னேற்றம் என்பது ஒரு பக்கம் அதன் தடைகளை உடைப்பது என இருபாதை பாய்ச்சலை முன்னெடுத்து வருகிறது. இது போன்ற தடைகள் புதிதல்ல மக்களின் திட்டத்திற்காக வெற்றி என்றென்றும் தொடரும்'' என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கே என். நேரு, பொன்முடி, எம் ஆர் கே பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், சிவசங்கரன்.  கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், நெய்வேலி சபா. ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன் பண்ருட்டி தி வேல்முருகன் காட்டுமன்னார்கோவில் சிந்தனைச் செல்வன், கடலூர் மாவட்ட திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் பால.கலைக்கோவன், மருத்துவர் பிரவீன் ஐயப்பன் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

முன்னதாக கடலூர் முகப்பாக உள்ள ஆல்பேட்டை என்ற இடத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சுமார 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் நின்றிருந்த மக்களிடம் கை கொடுத்தும், செல்ஃபி எடுத்துக் கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றவரே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வந்தார். இவருடன் அமைச்சர்கள் பொன்முடி, எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிவெ கணேசன் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.

சார்ந்த செய்திகள்