
இன்று மதுரை வந்த புகழேந்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது மத்திய கல்வித்துறை அமைச்சர் இந்தி புகுத்தும் பாணியில் ஒரே கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஏற்க மறுப்பது ஒப்புக்கொள்ள முடியாது. கல்வி நிதி வழங்க முடியாது என்றெல்லாம் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
1965 வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அந்த வரலாற்றை தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகத்திலேயே இந்தியா என்கின்ற நாட்டிலே உள்ள தமிழ்நாடு என்கிற மாநிலம் மாத்திரம் தான் மொழிக்காக போராடிய வரலாற்றை பெற்றது. எண்ணற்ற தலைவர்கள் மொழிப்போருக்காக என் உயிரை தியாகம் செய்தார்கள். எனது தந்தையார் கூட ஆறு முறை சிறை சென்றவர். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என எங்களை வளர்த்தவர்கள் தமிழ் மொழிக்காக போராடி பெருமை சேர்த்தவர்கள்.
அண்ணா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது இந்தி தான் ஆட்சி மொழியாக வேண்டும் என்று வடக்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள். இரண்டு நாள் தொடர்ந்து நடந்த அந்த அமளிக்கு பின்னர் அண்ணா அவர்கள் வடக்கே பல மாநிலங்களில் இந்தி பேசுவதாலேயே அதனை திணித்து விட முடியாது. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. காக்காய் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அதனால் காக்காவை நாம் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வண்ணத் தோகை விரித்தாடும் மயிலை தான் தேசிய பறவையாக ஏற்றுக் கொண்டோம். எங்கள் தாய்மொழி தேசிய பறவைக்கு சமமானது. உங்களது மொழி காக்கைக்கு சமமானது என்று திரும்ப பதிலளித்தார்கள். திராவிட இயக்கத் தலைவர்கள் போராடிய பின்னர் இந்தி மொழி ஆட்சி மொழி அல்ல என்கிற சட்டம் ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது.
இதையெல்லாம் மறந்து விட்டு இந்திக்கு ஆதரவாக பேசுவதும் திணிக்க முயல்வதும் சுதந்திரம் ஆகாது. அண்ணா திமுக தலைவர்கள் இதனை வேடிக்கை பார்க்கிறார்கள். மாநிலத்தில் ஆளுகின்ற அரசு இதனை எதிர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் எதிர்க்கிறார்கள். அண்ணா திமுக தலைவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நானே எனது தலைமையில் அண்ணா திமுக தொண்டர்களை ஒன்று திரட்டி இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பேன். அதுதான் அண்ணா திமுக தொண்டர்களின் உரிமை குரலாக இருக்கும். இவர்களைப் பற்றி கவலை இல்லை. ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால்தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் அதே நேரத்தில் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜெயலலிதா ஓபிஎஸ் மீது வெறுப்பாக இருந்தார்கள் என்று அவர் சொல்வது சுத்தமான பொய். மாறி மாறி பேசுவது அவரது வழக்கமாகிவிட்டது. மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது. அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு ஓபிஎஸ் மீது தேவையில்லாமல் பாய்வது சரியாகாது. 2001 முதல் ஜெயலலிதா நம்மை விட்டு பிரிகின்ற 2016 வரை அதற்கு பின்னரும் அமைச்சராக மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் தான் ஓபிஎஸ். தேர்தலில் தோல்வியை கண்டிராத தலைவர் ஓபிஎஸ் நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் இராமநாதபுரம் போனதுதான் தவறாகிவிட்டது.
இப்படி இவர்கள் பேசுவதை நிறுத்தி விட வேண்டும். தாடி எல்லாம் வைத்துக்கொண்டு உதயகுமார் சாமியார் போலவே இருக்கிறார். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு ஜால்ரா மெஷினை கையில் வைத்துக்கொண்டு ஜால்ரா அடித்தால் மிக நன்றாக இருக்கும். இன்றைக்கு பதிலாக 'இன்டயக்கு' என்றும், திருப்பி என்பதற்கு பதிலாக 'திலுப்பி', என்றும் சிபிஐ என்பது பதிலாக 'சிபி' என்றும், 'டிடிவி' என்பதற்கு பதிலாக டிடி என்றும் பேசுகின்ற இந்த பழனிசாமியை புரட்சித்தமிழர் என்பதா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை தவிர்த்து அவினாசி திட்டத்திற்கு சென்று பாராட்டு சூட்டிக் கொள்ளும் பழனிசாமி அவர்களை உதயகுமார் புகழ்வதா?
இவர்களெல்லாம் தலைவர் படம் இல்லாமல் பொதுவான விழாவிற்கு சென்றிருக்கிறார்கள். ஒரு ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்று முயற்சிக்கும் போது இப்படி வேண்டுமென்றே ஒற்றுமைக்கு இணங்கி வரும் தலைவர்களை பற்றி தவறாக பேசி ஒற்றுமை முயற்சியை சிதைக்கிறார்கள். இப்படியே போனால் 2026 தேர்தலில் 26 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஓபிஎஸ் அவர்களை பார்த்து அன்பிற்கினிய நண்பர் ஜெயக்குமார் அவர்கள் கொசு என்கிறார். கொசு மிகவும் ஆபத்தானது கொசு கடித்தால் மலேரியா வருகிறது. கொசுவில் இருந்து தான் டெங்கு வருகிறது. இந்த கொசு கடித்தால் ஜெயக்குமார் காணாமல் போய்விடுவார். ஆகவே பார்த்து பேச வேண்டும். நாங்கள் அவர் பக்கத்தில் இல்லை என்பதால் தேவையில்லாமல் பேசுவதை அனுமதிக்க முடியாது. இரட்டை இலை வழக்கில் தோற்று விட்டதால் பழனிசாமி பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். ஒற்றுமைக்கு சரியாக வர விட்டால் நீங்கள் அனைவரும் முகவரி இல்லாமல் போய்விடுவீர்கள்'' என்றார்.