கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவியின் குடிநீரில் சிறுநீர் கலந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்த சில நிமிடங்களில் அவருக்கு குமட்டல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவி குடித்த தண்ணீரை எடுத்துப் பார்த்தபோது அதில் சிறுநீர் கலந்திருப்பது தெரிய வந்தது.
உடனே சக மாணவர்களிடம் விசாரித்த போது இரு மாணவர்கள் தான் அந்தச் செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் இருவருடைய பெற்றோர்களையும் அழைத்து நடந்த சம்பவம் குறித்து விளக்கிய பள்ளி நிர்வாகம், அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் மீண்டும் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.