மே முதல் வாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதற்கான விரிவான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டில் கரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து, பொதுத்தேர்வுகள் முழுமையாக நடத்தப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக பாடப்பகுதிகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு 2021-2022ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. பிளஸ்- 2 மாணவர்களுக்கு மே 5- ஆம் தேதி தொடங்கி மே 28- ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ்- 1 வகுப்புக்கு மே 10- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு மே 6- ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 30- ஆம் தேதி முடிவடைகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை பிளஸ்- 1 பொதுத்தேர்வை 20,948 மாணவர்களும், 21,245 மாணவிகளும் எழுதுகின்றனர். பிளஸ்- 2 பொதுத்தேர்வை 18,394 மாணவர்களும், 20,861 மாணவிகளும் எழுதுகின்றனர். பிளஸ்- 1, பிளஸ்- 2 தேர்வர்களுக்காக மாவட்டம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 11- ஆம் வகுப்பு தேர்வர்களில் 281 பேரும், 12- ஆம் வகுப்பு தேர்வர்களில் 227 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
பிளஸ்- 1, பிளஸ்- 2 தனித்தேர்வர்களுக்கு என அழகாபுரம் ஸ்ரீசாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர் எம்ஏஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலரும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு சேலம் மத்தியs சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 23,302 மாணவர்களும், 22,217 மாணவிகளும் எழுதுகின்றனர். இவர்களில் 379 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வர்களுக்காக மொத்தம் 176 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விரிவாக செய்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 ஆகிய பொதுத்தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1.26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.