விஸ்வஹிந்து பரிஷத் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் துரை.திருவேங்கடத்துக்கு தபால் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நடுப்பட்டறை தெருவைச் சேர்ந்தவர் துரை.திருவேங்கடம். இவர் தஞ்சாவூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அது தொடர்பான மனுக்களை அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திருவேங்கடத்தின் முகவரிக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது, அதனை பிரித்து பார்த்ததும், அதில் அரிவாள் படம் வரைந்து, உலகிலேயே நெ.1 முட்டாளே, நீ இன்னும் சில நாட்களில் படுபயங்கரமாக படுகொலை செய்யப்படுவாய் என எழுதியிருந்தது.
இந்த கடிதத்தை பார்த்ததும் திருவேங்கடம் அதிர்ச்சி அடைந்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.