புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பகுதியில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றுவரை இந்த வழக்கு தொடர்பாக வெள்ளனூர் காவல்நிலையத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் சட்டப்பேரவை நிகழ்வில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையைத் தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.