![Unoccupied housing; Persons rented to other persons!](http://image.nakkheeran.in/cdn/farfuture/5-QbXwnh9rkMAKQCC7vPYx6Ht9307a6Xzq9akORr9Ys/1641634212/sites/default/files/inline-images/th-1_2572.jpg)
நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி மூன்று குழந்தைகளுடன் நாகையில் ஆண்டோ நகரில் வசித்து வந்துள்ளார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தனி ஆளாக சமாளிக்க முடியாமல் வீட்டைப்பூட்டிவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று 6 மாத காலமாக குழந்தைகளோடு அங்கு இருந்துள்ளார்.
வீட்டை பூட்டிவிட்டு நந்தினி சென்றதை நோட்டமிட்ட, பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன், சிலம்பரசன் உள்ளிட்ட கும்பல் இரண்டு மாடிகள் கொண்ட நந்தினியின் வீட்டை வேறு இரண்டு நபர்களிடம் அடமானத்திற்கு கொடுத்து தங்க வைத்துள்ளனர். அதன்படி சம்பத் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு கீழ் வீட்டையும், ஐயப்பன் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு மேல் வீட்டையும் வீட்டின் உரிமையாளர் போல பத்திரம் தயார் செய்து குடி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நந்தினி, பதறிதுடித்துக்கொண்டு தனது கணவர் பெயரில் உள்ள பட்டா, சிட்டா பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாமியாரை அழைத்துக்கொண்டு குழந்தைகளுடன் நாகைக்கு விரைந்துவந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டிருக்கிறார், அவர்களோ எங்கள் வீடு என மிரட்ட வேறுவழியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் நாகூர் போலீசாருக்கு தெரியவரவே அங்கு வந்து அவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், நந்தினியோ அங்கேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
![Unoccupied housing; Persons rented to other persons!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6FRve-ZThj7oo1m0kYDGIB0MkzfEj0CpCrEXJIEMDu0/1641634233/sites/default/files/inline-images/th-2_681.jpg)
விசாரணையில் நாகையைச் சேர்ந்த பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறை சென்ற ராஜேஸ்வரி என்பவரின் உடன் பிறந்த சகோதரி நந்தினி என்பதும், ராஜேஸ்வரியிடம் பணம்கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தர்ணாவில் ஈடுபட்டுவரும் நந்தினி, "எனது அக்கா வாக்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும், அவரது கடனுக்காக என்னுடைய சொத்தை எப்படி பத்திரமோசடி செய்து, எனது கனவரின் கையெழுத்தை போலியாக போட்டு அபகரிக்கமுடியும். எனது வீட்டை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டும்" என்கிறார்.
இதற்கிடையில் பணம்கொடுத்துவிட்டு வாடகைக்கு வந்திருப்பவர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.