தமிழ்நாட்டில் ரோடு போடுகிறோம் என்கிற பெயரில் டெண்டர் எடுத்து கமிஷன் கொடுத்து ஏனோ தானோ என்று யாருக்கும் புண்ணியம் இல்லாமல் ரோடு போடுவதுதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதே பாணியில் ரோடு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி தரமான ரோடு வேண்டும் என்று மக்கள் மறித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்று இருக்கிறது.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வரும் முக்கியமானகோவில். இந்த கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், அங்கிருந்து திருவெள்ளறை பெருமாள் கோவிலுக்கு செல்கின்றனர். அவர்கள் திருப்பைஞ்சீலி வடக்குத் தெரு வழியாக தீராம்பாளையம், தில்லாம்பட்டி வழியாக திருவெள்ளறை கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் திருப்பைஞ்சீலி வடக்குத் தெரு மற்றும் வனத்தாயி அம்மன் கோவில் செல்லும் சாலை ஆகியவை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
சாலை வசதி கேட்டு இந்த பகுதி பொதுமக்கள் கடந்த 30 வருடமாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். இந்த பகுதியில் சாலை வசதி ஏற்பட்டால் 20 கிலோமீட்டர் சுற்றி செல்லும் பிரச்சனைக்கு முற்றுபுள்ளிவைக்கப்படும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த சாலையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் டெண்டரில் 600 மீட்டர் நீளம் சாலை அமைக்க தேமுதிக கட்சியை சேர்ந்த விஜயக்குமார் என்பர் டெண்டர் எடுத்திருந்தார். அவருக்கு இந்த பகுதியில் தார் உற்பத்தி தொழிற்சாலையும் உள்ளது. இதனால் அவர் டெண்டர் நிதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை தரமாக அமைக்கப்படவில்லை ரோட்டிற்கு தேவையான அளவு தார் போடமால் ஏதோ ஏனோ தானோ வென்று தார் ஊற்றி சாலை போட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஆத்திரத்துடன் தரமான முறையில் சாலையை போட வேண்டும் என்றும், சரியான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வேலையை கண்காணித்து வந்த ஒப்பந்ததாரரின் விஜயகுமார் உதவியாளரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த உதவியாளரோ நீங்க எங்க வேண்டுமானலும் புகார் பண்ணிக்கோங்க எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்று மரியாதை குறைவாக பொதுமக்களை திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த சாலைபோடுவதை தடுத்து நிறுத்தினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் கருணாநிதி மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சாலை தரமாக அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சாலை தரமானதாக போட்டப்பட்டது.
தரம் இல்லாமல் போட்ட ரோட்டை மறித்து தரமான ரோட்டை போடவைத்த மண்ணச்சநல்லூர் பொதுமக்கள் போல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தட்டிக் கேட்டால் சாலைகள் எல்லாம் தரமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.