வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுக்கா வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் துறை அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கு, ஆற்காடு தாலுக்கா அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடமிருந்து போன் சென்றுள்ளது. அனைவரும் தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் உட்பட அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆற்காடு - திமிரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு ஏப்ரல் 30ந்தேதி வந்துவிட வேண்டும் என அழைப்பு சென்றுள்ளது.
என்ன விவகாரம் என தெரியாமல் அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளும் அந்த மண்டபத்தில் ஆஜராகியுள்ளனர். அனைவருக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் குருமா, மீன் வறுவல் எனப்போட்டு அசத்தியுள்ளார்கள். ஒரு அதிகாரியின் பெயரைச்சொல்லி அவர் தான் ஏற்பாடு செய்யச்சொன்னார். ஏற்பாடு செய்தோம், வந்து சாப்பிடுங்க எனச்சொல்லியுள்ளார்கள்.
எதுக்காக இந்த பிரியாணி விருந்து எனக்கேட்டவர்களிடம், தேர்தல் பணி சிறப்பா செய்து முடித்தற்காக என பதில் சொன்னார்களாம். தேர்தல் முடிவே மே 23ந்தேதி தான் வெளியாகப்போகிறது. அப்படியிருக்க எப்படி தேர்தல் பணி சிறப்பா முடிந்ததுன்னு விருந்து தர்றாங்க என அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்து சென்றுள்ளனர்.
இந்த விருந்து விவகாரத்தை கேள்விப்பட்ட அதிமுக, திமுக, அமமுக கட்சியினர் அதிர்ச்சியாகிப்போயுள்ளனர். இவங்க தேர்தல் வேலை பார்த்தவங்க, இவங்க எதுக்கு பிரியாணி விருந்து சாப்பிட்டு கொண்டாடனாங்க என கேள்வி எழுப்பி,விருந்துக்கு காரணம் என்னவாக இருக்கும் ? உண்மையில் தேர்தல் பணி சிறப்பா செய்ததுக்காகவா, யாராவது ஓய்வு பெற்ற விழாவா, வேறு நிகழ்ச்சியா என தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.