சென்னை கந்தன்சாவடியில் கட்டுமானப்பணியின்போது நடந்த விபத்தில் தொழிலாளிகள் சிக்கினர். இடுபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தீயணப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் தந்தி டிவிக்கு எதிரே கட்டப்பட்டு வந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான 4 மாடி மருத்துவமனையின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. பாரம் தாங்காமல் சிமெண்ட் கலவை மற்றும் இரும்பு பொருட்களுடன் கட்டிட சாரம் இடிந்து விழுந்தது. மேலும் நான்கு மாடி கட்டிடத்தின் தூண் இடிந்து விழுந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் இந்த விபத்து நடந்ததால் பலர் சிக்கினர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர். 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் , போலீசார் ஈடுபட்டுள்ளனர்.