Skip to main content

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்! சேலத்தில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

stalin

 

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று (செப்டம்பர் 18, 2018) நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.


தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஊழல் புரையோடிக் கிடக்கும் அதிமுக அரசைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சேலத்திற்கு முதன்முதலாக வருகை புரிந்தார். நேற்று இரவே சேலம் வந்துவிட்ட அவருக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியது: 

 
தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசு ஊழல் அரசாக மாறிவிட்டது. அகில இந்திய அளவில் ஊழல் நிறைந்த அரசாக தமிழக அரசு திகழ்கிறது. குட்கா ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், நெடுஞ்சாலை ஊழல் என கணக்கில் கொள்ள முடியாதது ஏராளம். சேலம் என்றாலே மாம்பழத்திற்கு சிறப்பு வாய்ந்தது. அந்த மாம்பழத்தை துளைக்கும் வண்டு போல எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அகில இந்திய அளவில் கறைபடிந்த அமைச்சரவை தமிழகத்தில்தான் உள்ளது.

 

stalin

 

எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலை விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பாலியல் புகார் உள்ளது. அவரை விசாரிக்க வேண்டிய டிஜிபி மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. இப்படி, ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகளே பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால்தான் நாம் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம்.


சிறந்த ஊழல்வாதி யார் என்று போட்டி போட்டால் அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். தமிழக அமைச்சர்கள் ஊழல் பணத்தை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுகின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். 

 

stalin

 

உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினர்களுக்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. விதிகள் மீறப்பட்டதாக எதிர்காலத்தில் தமிழத்திற்கு உலக வங்கியின் நிதி உதவி கிடைக்காமல் போகும் அபாயமும் உள்ளது. தமிழக மக்களின் வரிப்பணம் பினாமிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஊழலின் நாயகனாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.தேர்தல் நேரத்தில் மாதம் 5 லட்சம் ரூபாய் வருமானம் என்று அபிடவிட் தாக்கல் செய்துள்ள முதலமைச்சரின் உறவினர்கள் தற்போது வெளிநாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஊழலுக்குத் துணைபோகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து விட்டோம். 


நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கரன்சி எண்ணிய அனைவரும் கம்பி எண்ணுவார்கள். லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி விட்டனர். ஆனால், அதற்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமித்தால் முதலில் சிறைக்குப் போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்