


அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர்களை மாற்ற கோரி அ.தி.மு.க ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கொடுத்த பட்டியலை அப்படியே அதிகாரிகள் மாற்றி உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு உருவாக்கும்போது அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பிற்கு நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைந்து நற்பவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியானை கூட்டமைப்பு தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதாவது ஒரு ஒன்றியத்தில் இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர்களாவும் இரு அணியிலும் செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்.. "தங்கள் கீழ்கண்ட ஊராட்சிகளில் நமது கழகத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவியேற்று பொறுப்பில் உள்ளனர். அவர்களுக்கு இடையூறாக நமது கழகத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் கீழ்கண்ட ஊராட்சி செயலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யுமாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்றோம்" என்று கூறியுள்ள மனுவோடு 14 ஊராட்சி செயலர்கள் தற்போதைய பணியிடம் அவர்களை மாற்ற வேண்டிய இடம் ஆகிய பட்டியலையும் இணைத்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனு மாவட்ட ஆட்சியரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) க்கு அனுப்பியுள்ளனர். இந்த தகவல் அறிந்து ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன், அறந்தாங்கி ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் (திமுக), திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊராட்சி செயலர்கள் மாற்றப்படுவதால் நிர்வாக பிரச்சனைகள் வரும் அதனால் பணியிட மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். ஆனால் தி.மு.கவினர் கொடுத்த மனுவுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக அ.தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கொடுத்த மனுவையும் அவர்கள் கொடுத்த பட்டியலையும் நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளபடியே ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதல் உத்தரவுகளை 14 ஊராட்சி செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அ.தி.மு.க.வினர் தங்கள் கழகத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைச்சரிடம் கொடுத்த மனுவுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதை அறிந்த ஒன்றிய மக்களும் வியந்துள்ளனர். இதுவரை தனி அலுவலர்கள் உள்ள காலக்கட்டத்தில் பசுமை வீடு, கழிவறை கட்டியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது நடவடிக்கை எடுங்கள் என்று மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்கிய அதிகாரிகள் அ.தி.மு.க. என்றதும் உடனே நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையாக உள்ளது என்கிறார்கள் இளைஞர்கள். இந்த உத்தரவையும் அதற்கான பரிந்துரை கடிதத்தையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் செல்ல ஊராட்சி செயலர்கள் தயாராக உள்ளனராம்.