தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன..
இதற்கிடையே மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7 ஆம் தேதி (07.12.2023) ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்தார். இவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் இருந்தனர். அதனைத் தொடர்ந்து தலைமைச்செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை (09.12.2023) சென்னை வருகிறார். இவர் சென்னையில் மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.